மாணவர்கள் ஒரு நாளில் ஆன்லைன் பாடம் போக மற்ற நேரங்களில் என்ன செய்கிறோம் என யோசித்திருக்கிறோமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ‘காலம் பொன் போன்றது’ என்பதை பயனுள்ளதாக மாற்ற சில யோசனைகள்.
நேரத்தை நமக்கு உபயோகமாக மாற்றுவதற்கு அருமையான வழிகளில் ஒன்று, புத்தகம் படிப்பது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு, சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள புத்தகம் உதவும். ஒவ்வொரு அனுபவத்தையும் நீங்கள் தேடித் தேடி அனுபவிக்க முடியாது. ஆனால், புத்தகம் வாசிப்பதால் உங்களால் பல அனுபவங்களைப் பெற முடியும். ஆனால், அதைத் திரையில் படிப்பதைவிட காகிதத்தில் படிப்பது நல்லது.
உடற்பயிற்சி செய்யலாம்
சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆன்லைன் வகுப்பு, வீட்டுப்பாடம் எல்லாம் முடித்த பிறகு, நீங்கள் செய்யும் அரை மணி நேர உடற்பயிற்சி, நீங்கள் இழந்த புத்துணர்ச்சியை மீட்கும்.
கற்றுக்கொள்ளுங்கள்… பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்
உங்கள் வீட்டில் அண்ணன்கள் இருக்கிறார்களா, விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். வயதானவர்கள் இருக்கிறார்களா, அவர்களிடமிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் கற்றுக்கொண்ட நல்ல விஷயங்களைப் பிறருக்கும் கற்றுக்கொடுங்கள்.
இசையைக் கற்றுக்கொள்ளுங்கள்
இசையை ரசிப்பது மட்டுமின்றி, இசைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக கிட்டார், கீபோர்ட் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், இசை உங்களை மட்டும் அல்ல, உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்விக்கும்.
பேசிப் பழகுங்கள்
டிஜிட்டல் உலகில் இருக்கும் நாம், அந்த மயக்கத்திலேயே நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களை மறந்துவிடுகிறோம். சும்மா இருக்கும் நேரங்களில், உங்கள் நண்பர்களுடன் ஒரு ஜாலி அரட்டை அடியுங்கள்.
உதவி செய்யுங்கள்
வீட்டிலோ, பொது இடங்களிலோ முடிந்தவரை பிறருக்கு உதவி செய்யுங்கள். உதவி செய்வதில் கிடைக்கும் திருப்தி, வேறு எதிலும் கிடைக்காது.