கொவிட் பரவலை தொடர்ந்து இரண்டு வருடங்களில் அனைத்து பிரிவுகளும் பின்வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அதனை சரிப்படுத்தவதற்கு புதிய முறையில் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி மாவட்ட செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நாடு வழமைக்கு விரைவில் திரும்ப ஏற்படும் சந்தர்ப்பத்தை தவற விடாமல் இலக்கை வெற்றியடைய அனைவரும் எதிர்வரும் காலங்களில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மாவட்ட செயலாளர்களுடன் நேற்று காலை இடம்பெற்ற வீடியோ தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் முழுமையான அரச துறையும் மக்களின் அவசியத்தை நிறைவேற்றும் வகையில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
விவசாயத்தை முதன்மையாக கொண்டு நூற்றுக்கு 70 வீதம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, கரிம உரக் கொள்கை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிய போக்கு, சுற்றுலாத் துறையை புத்துயிர் பெற செய்தல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கான வலுவான சூழலை உருவாக்குதல் ஆகியவை வெற்றி பெற வேண்டிய சவால்கள் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.