எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி முதல் எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான வர்த்தக விமான பயணங்களை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையில் வாரத்தில் மூன்று நேரடி விமான சேவைகள் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெறும் சர்வதேச பிரான்ஸ் சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) மற்றும் எயார் பிரான்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இலங்கைக்கும், பிரான்ஸிற்கும் இடையில் நேர அட்டவணை முறைக்கு அமைய விமான சேவைகளை ஆரம்பிப்பது மாத்திரமல்லாது, இலங்கை வரும் விமான பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்குவது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
1933ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எயார் பிரான்ஸ் நிறுவனம் இந்த ஆண்டுக்கான ஸ்கை ட்ரெக்ஸ் விருதை பெற்றுக் கொண்டது.
கோவிட் தொற்று நோயிக்கு மத்தியில் மிகவும் பாதுகாப்பாக செயற்படும் சிறந்த விமான சேவை என்ற அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.