நடிகை சமந்தா தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் பரவி வந்தன.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் சொந்த பிரச்சினையில் நீங்கள் காட்டிய உணர்வுகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் மீது வைக்கப்பட்ட பொய்யான வதந்தி மற்றும் கதைகளுக்கு எதிராக நீங்கள் காட்டிய அனுதாபத்திற்கு நன்றி.
முதலில் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றார்கள். தற்போது நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.
விவாகரத்து என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வருகிறது. சத்தியமா சொல்றேன், இவையெல்லாம் எந்த வகையிலும் என்னை உடைக்காது” என பதிவிட்டுள்ளார்.