கோவிட் பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத்(Hemandha Herath) தெரிவித்துள்ளார்.
”கோவிட் பரவல் ஒரு மட்டத்திற்கு குறைந்துள்ளமை இப்படியான சந்தர்ப்பத்தில் காணக் கூடிய சாதாரண நிலைமையாகும். நோய் பரவலை தடுக்க எடுக்கப்பட்ட பல தீர்மானம் நீக்கப்பட்டுள்ள நிலைமையில், மீண்டும் நோய் பரவக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இவ்வாறான நிலைமையில், அனைவரும் சுகாதார பழக்கங்கள் பின்பற்ற வேண்டும் என்பதுடன் பயணங்களை குறைத்துக்கொண்டால், நோய் பரவல் குறைந்து, சாதாரணமாக கட்டுப்படுத்தக் கூடியவகையில், நோயாளிகளின் எண்ணிக்கையை குறைவான மட்டத்தில் வைத்திருக்க முடியும்.
இதன் மூலம் சமூக, பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் சென்று வழமையான நிலைமையை நோக்கி செல்ல முடியும்.
எவ்வாறாயினும் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் எந்த வகையிலும் ஆபத்தில் இருந்து மீளவில்லை” எனவும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ”2019 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட சாதாரண நிலைமையை நோக்கி செல்ல எவ்வளவு காலம் எடுக்கும் என்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஹேமந்த ஹேரத், அதனை உறுதியாக கூற முடியாது. மீண்டும் எமக்கு சாதாரண நிலைமையை நோக்கி செல்ல முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை.
நாம் புதிய சாதாரண நிலைமைக்கு செல்ல முடியும். அதற்கு முன்னர் இந்த நிலைமைக்கு எம்மால் எப்படியும் செல்ல முடியாது. இந்த கோவிட் நோயில் இருந்து நாம் விடுப்பட இன்னும் தசாப்த காலங்கள் செல்லக் கூடும். இதனால், நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் சுகாதார பழக்கங்களை வழமை போல் பின்பற்றுவது முக்கியமானது” எனக் கூறியுள்ளார்.