நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அருவியாற்று பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் முறையற்ற விதத்தில் மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த மணல் அகழ்வுக்கு எதிராக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச் செல்வம் பரஞ்சோதியால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு தொடுனர் சார்பாக ட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகளான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, எஸ்.டினேசன் உள்ளிட்டோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
குறித்த வழக்கு தொடர்பாக சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்-
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளரின் பெயரில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அருவியாறு பகுதியில் பரிகாரி கண்டல் கிராம அலுவலர் பிரிவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மணல் அகழ்வு பாரிய சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
மக்களின் சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்துகின்றது.அதில் காணப்படும் நீர் உவர் நீராக மாறி வருகிறது என் கின்ற சாட்சியங்களை முன் வைத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வு தடுக்கப்பட வேண்டும். இது ஒரு பொது தொல்லை என மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆதரித்தோம்.
இதன் போது எதிர்வரும் 29ம் திகதி குறித்த பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுகின்ற நிறுவனத்தினரை மன்னார் நீதிமன்றத்திற்கு வருமாறு கட்டளை பிறப்பித்துள்ளது.
எதிர் வரும் 29 ஆம் திகதி குறித்த வழக்கு தொடர்பாக விசாரணையை மன்று மேற்கொள்ளும்.
மணல் அகழ்வு வௌ;வேறு இடங்களிலும் இடம் பெற்று வருகிறது. யாழ்ப்பாணம்,கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு பாரிய அளவில் நடைபெற்று வருகிறது.
அகழ்வு செய்யப்படுகின்ற மண் மாலை தீவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பாராளுமன்றத்தில் சொல்லப்பட்டுள்ளது.
எமது வழங்கல் இவ்வாறு சுரண்டப்படுகிறது ஒரு பக்கம்.அதனால் ஏற்படுகின்ற சுற்றுச் சூழல் பாதிப்பு ஒரு பக்கம்.இந்த பாதிப்பினால் பாதிக்கப்படுகின்ற மக்களுடைய வாழ்க்கை மிகவும் முக்கியமானது.
பொது தொல்லையாக மாறியுள்ள குறித்த விடயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.
கிளிநொச்சி கௌதாரி முனை பிரதேசத்தில் இவ்வாறான ஒரு மணல் அகழ்வை குறித்த சட்ட விதிகளுக்கு அமைவாக நாங்கள் வெற்றிகரமாக நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக நிறுத்தியும் உள்ளோம் என்றார்.