கனடாவில் கோவிட் தடுப்பூசி பாஸ் நடைமுறை ஒக்டோபர் 30ம் திகதி முதல் கட்டாயம் அமுலுக்கு வரும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இதன்படி முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமே உள்நாட்டு விமான, ரயில் பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அக்டோபர் 30 முதல் 24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட பயண நேரங்களைக் கொண்ட கப்பல் பயணங்களை மேற்கொள்ளுவோருக்கும் கட்டாய தடுப்பூசி பாஸ் நடைமுறை அமுலாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்துப் பயணிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என கனேடிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவசரகால பயணம், மற்றும் மருத்துவக் காரணங்களுக்காகத் தடுப்பூசி போட முடியாதவர்கள் போன்ற குறிப்பிட்ட சில தரப்பினருக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒக்டோபர் 31ம் திகதிக்குள் கனடாவில் அரச ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் ஊதியம் இன்றி விடுப்பில் அனுப்பப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.