அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாட்டு போராட்டங்களை ஒடுக்கி பாடசாலைகளை திறக்க வேண்டும் என முன்னாள் உயர் கல்வி அமைச்சரும், தற்போதைய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க (S.P. Dissanayake) தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஆசிரியர் போராட்டப் பிரச்சினைக்கு தீர்வு காண எனக்குத் தெரியும். ஜனாதிபதியும், பிரதமரும் அமைதியான வழியிலான தீர்வினையே எதிர்பார்க்கின்றார்கள். பிரதமருடனான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படும் என நம்புகின்றேன். அவ்வாறு இல்லை என்றால் போராட்டத்தை ஒடுக்கி நாம் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் அவ்வாறு செய்திருக்கின்றோம். முன்னாள் பிரதமர் சிறிமோவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன போன்றவர்கள் இதனை செய்துள்ளனர்.
உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. மஹதிர் மொஹமட், லீ குவன் போன்ற தலைவர்கள் போராட்டங்களை ஒடுக்கியுள்ளனர். செல்வந்த நாடுகள் போராட்டங்களை ஒடுக்கியிருக்காவிட்டால் இன்றும் அந்த நாடுகள் எம்மை போன்று வறிய நாடாகவே இருந்திருக்கும்.
போராட்டங்களை அடக்கி ஒடுக்கி வேலையை செய்த காரணத்தினால் குறித்த நாடுகள் இன்று செல்வந்த நாடுகளாக மாறியுள்ளன. என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் ஆசிரியர் அதிபர் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் போது சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு இரண்டு கட்டங்களாக தீர்வு வழங்கப்படும் என பிரதமர் பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.