சம்பள பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி தொடர் போராட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரைத் திருப்பிவிடும் சதித்திட்டத்தினை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காணாது பாடசாலைகளை திறக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு ஆபத்தானது என கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
அதிபர்கள் ஆசிரியர் சம்பளப் பிரச்சனை தொடர்பாக பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பில் பிழையான கருத்துக்களை அரசாங்கம் பரப்புரை செய்து வருகின்றது. சம்பளப் பிரச்சனையினை இரண்டு கட்டங்களாக தீர்ப்பதாக அரசாங்கம் தெரிவித்ததாகவும் ஆனாலும் ஆசிரியர் சங்கம் அதற்கு சம்மதிக்கவில்லை என தெரிவிக்கப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை.மாறாக மூன்று கட்டங்களாக சம்பளத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டதனால் அதனை நிராகரித்துள்ளோம்.
இதேவேளை எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளைத் தொடங்குவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்ற நிலையில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிட்டவில்லை. இதனால் ஆசிரியர்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கல்விச் செயற்பாடுகளில் அரசியல்வாதிகளின் தலையீடு ஊடாக எமது சம்பளப் பிரச்சனைக்கான கோரிக்கையை நலிவடையச் செய்யும் சதித்திட்டத்தினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோரைத் திருப்பிவிடும் நடவடிக்கையினை பிரதேச அரசியல்வாதிகள் செய்யத் தொடங்கிவிட்டனர்.
மேலும் காவல்துறையினரைக் கொண்டும் எமது போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறார்கள்.எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் பயப்படாமல் எமது போராட்டம் முன்னெடுக்கப்படும். எமது சம்பளப் பிரசசனைகளைத் தீர்க்காமல் பாடசாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த முடிவு பாரிய ஆபத்தாக அமையும்.