எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும்> இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்ந்து நஷ்டம் அடைவதாலும் அமைச்சர் கம்மன்பில இரண்டு மாற்று திட்டங்களை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்கள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 7 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திறைசேரி மூலம் நிவாரணம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால், எரிபொருள் விலையை விரைவாக அதிகரிப்பதே மற்று தீர்வு என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எரிவாயு, பால்மா மற்றும் கோதுமை மாவு உட்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலை திடீரென உயர்த்தப்பட்டால், மக்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், ஆகையினால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என அமைச்சர் கம்மன்பிலவுக்கு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, திறைசேரியிலிருந்து பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நிவாரணம் வழங்குமாறு அமைச்சர் கேட்டதற்கு ஜனாதிபதி சரியாக பதிலளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.