நாட்டில் நடப்பு ஆண்டுக்கான (2021) வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை இன்று (22) ஆரம்பமாகவுள்ளதுடன், 6 சுற்றுக்களாக மழை பெய்யும் எனவும் இந்த மழையின் செறிவு அதிகமாக இருக்கும் என நம்பப்படுவதாக யாழ்.பல்கலைகழக மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா
குறுகிய காலத்தில் வடக்கு மாகாணத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்குமாக இருந்தால் வெள்ள பெருக்கு உருவாக வாய்ப்பு அதிக அளவு காணப்படுவதாக யாழ்.பல்கலைகழக மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராஜா எச்சரித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது,
கடந்த 19ம் திகதியுடன் தென்மேற்கு பருவக்காற்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் 20ம் திகதி தொடக்கம் காற்றின் நகர்வு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய நகரும். இதனால் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை இன்று தொடங்கும் என மாதிரிகள் காட்டுகின்றன.
எதிர்வரும் 27ம் திகதிவரை பருவப்பெயர்ச்சி மழை நீடிக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. பசுபிக் பிராந்தியத்தில் நிலவும் லா நினோவின் நிலைமைகளும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் இரு முனையிலும் எதிர்மறையாக இருப்பதன் காரணமாக இந்த வருட வடகீழ் பருவபெயர்ச்சி மழையின் அளவு உயர்வாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இதற்கு சாதகமான நன்மைகளை இந்து சமுத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை எதிர்வுகூறலும் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வடகீழ் பருவக்காற்று மழை 6 சுற்றுக்களில் மழையை பெய்விக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நவம்பர் 25ம் திகதி முதல் டிசம்பர் 10ம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த பருவ மழையின் 60 சதவீதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வங்கக்கடலில் இந்த ஆண்டு 5ற்கும் மேற்பட்ட தாழமுக்கங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மேலும் அவற்றில் சில புயலாக மாறுவதற்கும் வாய்ப்புக்கள் உள்ளது.
இந்நிலையில் குறுகிய கால இடைவெளியில் அதிக அளவு மழைவீழ்ச்சி கிடைக்கும் ஆகையால் வெள்ளப்பெருக்கு நிச்சயம் ஏற்படும். எனவே வெள்ள முற்பாதுகாப்ப நடவடிக்கைகள் அவசியம் என கூறியுள்ளார்.