கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (21) கிழக்கு மாகாணத்தின் கொரோனா தொற்று நிலவரம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, ஏ.ஆர்.எம்.தௌபீக் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்,
நடப்பு ஆண்டில் ஓகஸ்ட் 3ஆம் மற்றும் 4ஆம் வாரங்களில் சராசரியாக 6ஆயிரம் கொரோனா தொற்றாளார்களும் 100 மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியிருந்தது.
இருப்பினும் கடந்த செப்டம்பர் முதலாம் வாரத்தில் 4,400 தொற்றாளர்களும் 2வது வாரத்தில் 3,300 தொற்றாளர்களும் 80 மரணங்களும், 3வது வாரத்தில் 2ஆயிரம் தொற்றாளர்களும் 67 மரணங்களும் 4வதுவாரத்தில் 1,104 தொற்றாளர்களும் 42 மரணங்களும் 5வதுவாரத்தில் 801 தொற்றாளர்களும் 12 மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்த அறிக்கையின் படி, கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் படிப்படியாக குறைந்துகொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறே முழு நாட்டிலும் படிப்படியாக குறைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.