ஆப்கானிஸ்தானில் உரிய நேரத்தில் உணவு கிடைக்காவிட்டால் லட்சக்கணக்கான பொது மக்களும், குழந்தைகளும் உயிரிழக்கக் கூடும் என்று உலக உணவு திட்டம் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உலக உணவு திட்ட அமைப்பின் தலைமை இயக்குநர் பிஸ்லே தெரிவிக்கையில், “ஆப்கான் மக்கள் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பசியால் குழந்தைகள் இறக்கும் நிலைய ஏற்பட்டுள்ளது.
நிதி வழங்குவதிலும் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில்,நிலைமை மோசமாகியுள்ளது. உரிய நேரத்தில் உணவு கிடைக்காமையினால் பசியில் லட்சக்கணக்கான ஆப்கான் மக்களும், குழந்தைகளும் இறக்கலாம். கடந்த 2 மாதங்களில் மக்கள் கடும் பட்டினிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், உலக நாடுகள் இதனை இன்னும் உணரவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தலைமையில் இந்தியா உள்ளிட்ட பத்து நாடுகள் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் தொடர்பான பேச்சுவார்த்தை மாஸ்கோவில் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த நிலையில், இதில் மனிதாபிமான உதவிகள் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு, பல நாடுகளுக்கான ஏற்றுமதி, இறக்குமதி போன்ற பல விடயங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.