வடக்கு மாகாணத்தில் இன்று அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 55 சதவீத மாணவர்களின் வருகையும், 84 சதவீத ஆசிரியர்களின் வருகையும், 97 சதவீத அதிபர்களின் வருகையும் பதிவாகியுள்ளதாக மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் அறிக்கையிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இன்று 906 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில் 882 பாடசாலைகளின் அதிபர்கள் வருகை தந்துள்ளனர்.
7 ஆயிரத்து 48 ஆசிரியர்களின் வருகையை எதிர்பார்த்த போதும் 5 ஆயிரத்து 965 ஆசிரியர்களின் வருகை பதிவாகியுள்ளதுடன்,88 ஆயிரத்து 702 மாணவர்களில் 49 ஆயிரத்து 418 மாணவர்களின் வருகையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் மாணவர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மாணவர்களின் சீருடைகளை தயார் செய்வதில் உள்ள நெருக்கடிகள் காரணமாக கல்வி அமைச்சின் அனுமதியுடன் சீருடை கட்டாயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



















