இந்தியாவில் இரண்டாவது அலை பரவலுக்கு காரணமான, ‘டெல்டா’ வகையின் ஒரு பகுதியான, ‘ஏ.ஒய்., – 4’ என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தின் இந்துாரில் இரண்டு இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது.கடந்தாண்டு அக்டோபரில் முதலில் தென்படத் துவங்கியது, ‘பி.1.617.2’ எனப்படும் டெல்டா வகை உருமாறிய கொரோனா. இரண்டாவது அலை பரவலுக்கு இதுவே முக்கிய காரணம். இந்நிலையில் இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில், 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
அதில் ஒன்றான, ஏ.ஒய்., – 4 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.புதிய தொற்று கடந்த செப்., மாதம் தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, மத்திய பிரதேசத்தின் இந்துாரில் ஏழு பேருக்கு இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.பல்வேறு இடங்களில் பணியாற்றி, மாவ் இராணுவ முகாமுக்கு வந்தவர்களில் 30 பேருக்கு தொற்று உறுதியானது. அதில் இரண்டு அதிகாரிகளுக்கு, இந்த புதிய தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இவர்கள் அனைவரும் இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுள்ளனர்.
மேலும், எந்த நோய் அறிகுறிகளும் அவர்களிடம் தென்படவில்லை. மஹாராஷ்டிராவில் நடத்தப்பட்ட சோதனைகளில், அங்கும் இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே ‘ஏ.ஒய்., – 4.2’ எனப்படும் ‘டெல்டா பிளஸ்’ பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் உள்ளது.டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு, மக்கள் தொகையில் 0.1 சதவீதம் பேருக்கே ஏற்பட்டுள்ளது. அதனால் பயப்படத் தேவையில்லை,’ என, சி.எஸ்.ஐ.ஆர்., உயிரணு ஆய்வு மைய இயக்குனர், டாக்டர் அனுராக் அகர்வால் கூறியுள்ளார்.



















