ஒலுவில் துறைமுகம் மீன்பிடி செயற்பாடுகளுக்காக விரைவில் திறக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
அம்பாறைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், கல்முனை கடற்றொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து சட்டவிரோத தொழில் முறைகளுக்கும் முடிவு கட்டப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
மண்ணரிப்பு போன்ற காரணங்களினால் ஒலுவில் துறைமுகத்தின் செய்பாடுகளை விரும்பாத மக்களின் நியாயமான காரணங்களுக்கு பரிகாரங்களை வழங்குவதன் மூலம் அனைவருடைய சம்மதத்துடன் ஒலுவில் மீன்பிடித்துறைமுகம் ஆரம்பிக்கப்படும்.
மேலும், ஒலுவில் துறைமுகத்தினைப் பயன்படுத்தி ஆழ்கடலில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதுடன், படகுகளை வாங்குவதற்கு கடன் வசதிகளும் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மைக்கு பொருத்தமான இடங்கள் ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்டு விரும்புகின்வர்களுக்கு அவை வழங்கப்படும். அத்துடன், படகு கண்காணிப்புக் கருவிகளை பெற்றுத்தருவதுடன் தெலைத்தொடர்புக்கருவிகளுக்கு வரிக் குறைப்புச் செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
சட்டவிரோத தொழில் முறைகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்படும்.மாவட்ட மீனவர்கள் விரும்பினால் மூன்று இஞ்சிக்கு குறையாத கண்களை உடைய வலைகளைப் பயன்படுத்தி சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், மீன்பிடித் துறைமுகத்தினை ஆரம்பிப்பது தொடர்பாக துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதுடன், சுமார் 300 பேருக்கு உடனடி வேலை வாய்ப்பினை வழங்கங்கூடிய குளிரூட்டல் பொறிமுறையை இயக்குவது தொடர்பாகவும், சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது,திருக்கோவில் பிரதேசத்தில் கடலரிப்பினால் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், அருகம்பை உட்பட பல்வேறு பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




















