காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 11ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 23 மீனவர்களையும், அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்திருந்தனர்.
இதனிடையே நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான் மீனவர்களுக்கான விளக்கமறியலை இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கடற்படை முகாமில் உள்ள மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றக்கோரி யாழ்.மாவட்ட நீரியல்வளத்துறை அதிகாரிகள் மனுவொன்றினை கையளித்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 23 மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் ஆஜரான இந்தியத்துணைத்தூதரக அலுவலக சட்டத்தரணி மீனவர்களை தூதரக அதிகாரிகள் நேரில் சந்தித்து தமிழகத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களிடம் தொலைபேசி வாயிலாக பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், மீனவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தூதர அதிகாரிகள் வழங்கவும் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில்,எதிர்வரும் 1ஆம் திகதி வரை மீனவர்களை இந்திய துனை தூதரகம் சார்பில் நேரில் சென்று சந்திப்பவர்கள் தொடர்பான விபரத்தை மன்றுக்கு அறிவிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.