வீடியோ கால் செய்யும் போது சுந்தர் பிச்சை செய்த தவறை சுட்டிக்காட்டி, ட்வீட் ஒன்றை அவரே பதிவு செய்து இருக்கிறார்.
கடந்த ஆண்டு பெருந்தொற்று ஆரம்பித்தது முதல் நண்பர்கள், குடும்பத்தாருடன் இணைப்பில் இருக்க வீடியோ கால் மட்டுமே ஒற்றை தீர்வாக மாறி போனது. வீடியோ கால் சேவைக்கான தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஜூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் மீட் மற்றும் பல்வேறு இதர செயலிகள் அசுர வளர்ச்சி பெற்றன.
வீடியோ காலிங் சேவைகளை அதிகம் சார்ந்து இருக்கும் சூழலில் பலர் இவற்றில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களில் அவ்வப்போது சிக்குவதும் வாடிக்கையாகி இருக்கிறது. இதுபோன்ற சிக்கலில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் சிக்கியிருக்கிறார்.
சமீபத்தில் கெர்மிட் தி பிராக் உடன் நடைபெற்ற நேர்காணலில் சுந்தர் பிச்சை பேசும் போது அன்மியூட் செய்ய மறந்துவிட்டார். பின் அதை கவனித்த சுந்தர் சிரித்தப்படி நேர்காணலை தொடர்ந்தார். இந்த சம்பவத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த சுந்தர் பிச்சை, அனைவரிடமும் அன்மியூட் செய்ய மறக்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.