வடக்கில் உள்ள தமிழர்கள் தவறாக வழிநடத்தப்படவில்லை எனவும், மாறாக இராணுவத்தின் முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ள சில தரப்பினர் தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப வடக்கில் வாழும் பொதுமக்களின் மனநிலையை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இராணுவத்தினர் அயராது ஆற்றிவரும் சேவைகளை வடக்கில் உள்ள தமிழ் சமூகம் நன்கு உணர்ந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது படையினர் காட்டிய அதே அவதானத்தையே யாழ்ப்பாணத்தில் இன்றும் பொதுமக்கள் மீது படையினர் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் (SFHQ-J) அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போதே ஜெனரல் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராணுவத் தளபதியை யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பின் போது, வடக்கின் தற்போதைய அபிவிருத்திகள், பாதுகாப்பு, சமூக அபிவிருத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை இராணுவத் தளபதியிடம் சமர்ப்பித்தார்