வவுனியா, தவசிகுளம் பகுதியில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா, தவசிகுளம் பகுதியில் இன்று அதிகாலை (04.11) திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட போது 1 கிலோ 600 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.
இதனையடுத்து இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் அப் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட கேரளா கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆகியோரை விசேட அதிரடிப் படையினர் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வவுனியா பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.