இந்த உலகத்தில் பெண்கள் மட்டுமே வாழும் கிராமம் ஒன்று உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம்.
ஆப்ரிக்க நாடான கென்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் முழு சுதந்திரத்துடன் வாழும் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு அனுமதி கிடையாது. கென்யாவில் உள்ள சம்புரு என்ற மாநிலத்தில் உள்ள உமோஜா என்ற அதிசய கிராமம் தான் அது. கடந்த காலங்களில் ஆண்களின் கொடுங்கோன்மைக்கு ஆளான பெண்கள் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
வன்முறைக்கு எதிராக உள்ள இந்த மக்கள், பாரம்பரியமாக ஆண்களுக்கு அடிபணியும் பெண்களை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. இங்கு வாழும் பெண்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை அல்லது வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். மாட்டு சாணம் மற்றும் மண் கலந்து கட்டப்பட்ட மான்யட்டா குடிசைகளால் இந்த கிராமம் நிறைந்துள்ளது. மேலும் பாதுகாப்புக்காக இந்த குடிசைகளை சுற்றி முள்வேலிகள் போடப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் ராணுவத்தினரின் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுகளுக்காக 1990-ம் ஆண்டு இந்த கிராமம் உருவாக்கப்பட்டது. ஆனால் பின்னர், வீட்டு வன்முறை, பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கு வாழத் தொடங்கினர். அங்கு ஆரம்பப் பள்ளியை பெண்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்புருவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக கலாச்சார மையத்தையும் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கிராமத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இன்றுவரை இங்கு வாழும் பெண்களின் வாழ்க்கை கடினமானதாக இருந்தாலும், அவர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றனர். ஏனெனில் ஆண்களின் கொடுங்கோன்மையை அவர்கள் சந்திப்பதில்லை.
உமோஜா கிராமத்திற்கு சென்று பார்வையிட மட்டுமே ஆண்களுக்கு அனுமதி உண்டு. அந்த கிராமத்தில் வசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. சிறு குழந்தையிலிருந்தே உமோஜாவில் வளர்க்கப்படும் ஆண்கள் வேண்டுமானால் அங்கு தங்கலாம்.. கிராமமாக இருந்தாலும் நகரமாக இருந்தாலும் சிறு குழுந்தை முதல் வயதான மூதாட்டி வரை பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள இந்த சூழலில், இந்த கிராமம் பெண்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது என்று கூறினால் அது மிகையல்ல..!!