இலங்கையில் உள்ள பெரும்பாலான சிறுமிகள், முதல் முறையாக மாதவிடாய் ஏற்படும் வரை, அது தொடா்பில் அறிந்திருப்பதில்லை என ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 1.8 பில்லியன் பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயற்கையான மாதாந்த நிகழ்வு என்று UNFPA தெரிவித்துள்ளது.
மில்லியன் கணக்கானவர்களுக்கு தங்கள் மாதாந்த மாதவிடாய் சுழற்சியை கண்ணியமான, ஆரோக்கியமான முறையில் முகாமைப்படுத்தற்கான உரிமை மறுக்கப்படுகிறது.
மாதவிடாய் தொடர்பான அவமானம் மற்றும் களங்கத்துடன் இணைந்த கலாசாரத் தடைகள், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத் தேவைகள் பூர்த்தி செய்வதை கடினமாக்குகின்றன.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் தகவல்படி, இலங்கையில் 66% பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் ஏற்படுவம் வரை தெரியாது.
மேலும் அவர்கள் எதிர்கொள்ளும் வலி மற்றும் பிரச்சனைகளை வெளிப்படையாகப் பகிரவும் விவாதிக்கவும் முடியவில்லை.
மாதவிடாயின் போது கடுமையான வலியை இயல்பாக்குவது ஒரு பெண்ணின் நல்வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே பெண்களுக்கு கடுமையான மாதவிடாய் வலி இருந்தால், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது புத்திசாலித்தனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்பது பெண்களையும், சிறுமிகளையும் பாதிக்கும் மற்றும் மாதவிடாய் காலத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தும் நிலையாகும்.
இது குறிப்பிடத்தக்க சமூக, பொது சுகாதார மற்றும் பொருளாதார தாக்கங்களையும் கொண்டுள்ளது. இது கடுமையான வலி, சோர்வு, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் கருவுறாமை காரணமாக வாழ்க்கைத் தரத்தை குறைக்கலாம்.
எனவே, பெண்களும், சிறுமிகளும் தங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் நிலைமைகளைப் பற்றி அறிந்திருப்பதும், எப்போது, எங்கு உதவியை நாடலாம் என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம்.
இந்தநிலையில் எண்டோமெட்ரியோசிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே கலந்துரையாடல்களை உருவாக்குவது, பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கைத் தரத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கான முதல் படியாகும் என்று ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியப் பிரதிநிதியான நவ்ச்சா சுரேன் (Navcha Suren) தெரிவித்துள்ளாா்.