நாட்டு மக்களுக்கு நஞ்சற்ற உணவை வழங்கும் புரட்சிகரமான மாற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சேதன விவசாயம் போன்று, மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“இந்த நாட்டை 10 தடவைக்கு மேல் மூட வேண்டி வந்திருக்கு. எதிர்க்கட்சிகள் நாட்டை மூடுங்கள் என்று கூக்குரலிடுகிறார்கள், மூடும் போது, நாட்டைத் திறக்குமாறு கூச்சல் போடுகிறார்கள்.
கோவிட் தொற்றினால் ஏற்றுமதி வருமானம் தொலைந்து போனது.சுமார் 200,000 மத்திய கிழக்கு தொழிலாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் 4 பில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியிருந்தது, அதை செலுத்தினோம்.
69 லட்சம் பேர் எனக்கு வாக்களித்தது என் முகத்திற்காக அல்ல, அவர்கள் எனது கொள்கைகளுக்காகவே வாக்களித்தனர். மக்களுக்கு விஷமில்லா உணவு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தோம். மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம்.
“சிலர் என்னை இராணுவத்தைப் போல இருக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். நான் விரும்பினால் அதைச் செய்ய முடியும், ஆனால் இது ஒரு ஜனநாயக நாடு.
நல்லாட்சியில் ஜனாதிபதி, பிரதமர் அதிகளவான வாகங்களை பயன்படுத்தினர். எனினும், நான் அவற்றை தவிர்த்துள்ளேன். ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்கு சென்ற போது சாதாரண ஹோட்டலிலேயே தங்கினேன்.
என்னுடன் என் மனைவியும் வந்திருந்தார். அவரின் விமான டிக்கெட்டுக்கு தனது சொந்த பணத்தையே கொடுத்திருந்தேன். கொழும்பில் ஜனாதிபதிக்கு மாளிகை வழங்கப்பட்டுள்ளது. எனினும், நான் என்னுடைய பழைய வீட்டிலேயே இருந்து வருகின்றேன்.
கோவிட் நோய்த்தொற்று காரணமாகச் சுற்றுலா கைத்தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்மூலம் இழக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக தொழில்கள், கிட்டத்தட்ட 03 மில்லியன்கள் ஆகும்.
ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டதோடு, உயர்மட்டத்தில் இருந்து கீழ் மட்டும் வரையான வியாபாரிகள் வரை அனைவரதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
அத்துடன், ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியுடனும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறித்த தினத்தில் ஊதியம் வழங்கப்பட்டது.
நான்கு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் தவணைகளை உரியவாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சேதன விவசாயம் போன்று, மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பயறு, கௌப்பி, உளுந்து, மஞ்சள் உட்பட 16 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று அதன் பிரதிபலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.
கறுவா, மிளகு, மஞ்சளுக்கான உயர் விலையை விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்ற அந்த வருமானத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
இந்நிலைமையைப் புரிந்துகொண்டு, பசுமை விவசாயச் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து, இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன், மதில்களில் சித்திரங்களை வரைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஆரம்பித்தனர்.
மேலும் பலர், கைவிடப்பட்டிருந்த வயல்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்று வைத்த நம்பிக்கையுடன் புரட்சிகரமான மாற்றத்துக்காக மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.