திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அப்பிரதேச மக்கள் கடும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர்.
இம்மாவட்டத்தின் கந்தளாய் முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், புல்மோட்டை, சூரியபுர, ஜயந்திபுர போன்ற பகுதிகளில் மழை நீர் அதிகரித்துக் காணப்படுவதோடு தாழ்நிலப் பகுதிகள் மற்றும் வீதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுங்கின்றன.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இடை விடாத மழை பெய்து வருகின்றது. இதனால் வயல் நிலங்கள், பள்ளப்பகுதிகள் போன்றன நீரில் மூழ்கி காணப்படுகின்றன.
இதேவேளை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள் என தெரியவருகின்றது.