இலங்கையில் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு விரைவில் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர், இது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முழுமையாக தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ளாதவர்களை பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்துவது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியிருந்ததாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் நேற்று கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்,இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் எந்தவொரு நபரும் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு தனிநபரும் மற்ற நபர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும், எனவே தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் முடிவை எடுத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக தொலைபேசியில் பயன்படுத்தக் கூடிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று பரவும் இடங்களில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.