அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வீதி ஒழுக்கம் தொடர்பில் சாரதிகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தலைமையில் அண்மையில் நடைபெற்ற பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துக்களினால் 1948 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கடந்த 10 வருடங்களில் சுமார் 27,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனால் வீதி ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் இலங்கை பொலிஸ் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பணம் செலுத்தும் முறைமையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக ஸ்பாட் ஃபைன் முறை மற்றும் சாரதியின் டிமெரிட் புள்ளி முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு சாரதிகளின் ஒழுக்கமின்மையே பிரதான காரணமாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமையை தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களால் இனங்கண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி, முதற்கட்டமாக மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சாரதிகளுக்கான இரண்டு வார பயிற்சித் திட்டம் எதிர்வரும் காலங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஏறக்குறைய 17,000 மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகள் தற்போது பணிபுரிந்து வருவதாகவும், அடிக்கடி பேருந்து விபத்துக்கள் ஏற்படுகின்ற நிலையில் அவர்களது ஒழுக்கத்தை பேண வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது கலந்துதுரையாடப்பட்டுள்ளது.