புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்றொழில் அமைச்சினால் தென்னிலங்கையைச் சேர்ந்த நபருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியிலுள்ள சிறீமுருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களை ஏமாற்றியே இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் வேலணை பிரதேச சபை உறுப்பினரொருவர் இருப்பதாகவும் அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.
மேற்படி கடலட்டை பண்ணை அமைக்கப்படுமானால் இப்பகுதியிலுள்ள கடல் வளங்கள் முழுமையாக அழிக்கப்படலாமென்றும் குடும்பத்தோடு தற்கொலை செய்வதனை தவிர வேறு வழியில்லையென்றும் அம்மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறித்த பண்ணை அமைப்பது தொடர்பில் வேலணை பிரதேச சபையினரின் எந்தவித அனுமதியுமின்றி நடைபெறுகின்ற இச்செயற்பாடு குறித்து வேலணை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களான கருணாகரன் நாவலன், செல்லப்பா பார்த்தீபன், பிலிப் பிரான்சிஸ், சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு மீனவர்களின் கருத்துக்களையும் செவிமெடுத்திருந்தனர்.
உள்ளூர் மீனவர்களை ஏமாற்றி செய்யும் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் குறித்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சமூக மட்ட அமைப்புக்கள் முன்வரவேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.