அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் என்பது உலக அரங்கில் ஏற்பட்ட மாற்றமே தவிர இலங்கைக்கு மாத்திரமானது அல்லவென ஆளும் தரப்பு இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சனத் நிஸாந்த, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக மக்கள் மத்தியில் பரவியுள்ள கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஆளுக்கு ஆள் உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றனர். ஆனால் கோவிட்டிற்கு உதவி செய்து அரசாங்கத்தை தோல்வியடைச் செய்வதற்கு எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர்.
அரசாங்கத்தினால், முன்னெடுக்கப்படும் கோவிட் தடுப்பு வேலைத்திட்டத்தை முடக்கும் வேலையை எதிர்க்கட்சியினர், செய்து வருகின்றனர். எந்தவித தேர்தல்களும் இல்லாத நிலையில் எதிர்கட்சியினர் என்ன தேவைக்காக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்?
எதிர்க்கட்சியினருக்கு உதவி வழங்கி, நாட்டில் மீண்டும் கோவிட் தொற்று பரவுவதற்கு மக்கள் தயாராக இல்லை. இன்று எம்மை விட அதிக பலம் பொருந்திய நாடுகள், மின்சாரம், எரிபொருள் என்பனவற்றை நிறுத்தியுள்ளன.
உணவுப்பொருட்களின் விலையேற்றம் என்று பார்க்கும் போது உலக நாடுகள் பலவற்றில் விலையேற்றம் காணப்படுகின்றது. தற்போது நாடுகளுக்கிடையில் உணவுப் பரிமாற்றங்களைச் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இதனால் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனாலும் இது தற்காலிக விலையேற்றமேயன்றி நிலையானதல்ல. இருந்த போதிலும் இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.