நாட்டில் தரம் குறைந்த எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன (Gemunu Wijerathne) குற்றம்சாட்டியுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசல் என்பன தரம் குறைந்தவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேர்காணலொன்றில் வைத்து அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தரம் குறைந்த எரிபொருட்களை பயன்படுத்துவதனால் எங்களது வாகனங்கள் பழுதடைகின்றன.
தரம் குறைந்த பெற்றோல், டீசல் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுவதாக நாம் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளோம்.
கடந்த காலங்களில் பெற்றோல் மற்றும் டீசல் பயன்படுத்தி வாகனங்கள் செலுத்திய போது பயணம் செய்யக் கூடிய தூரமும், தற்பொழுது பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் மூலம் பயணம் செய்யக்கூடிய தூரத்திலும் வித்தியாசம் உண்டு.
தற்பொழுது வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் சீக்கிரத்தில் தீர்ந்து விடுகின்றது. குறைந்த தூரமே பயணம் செய்ய முடிகின்றது.
இலங்கையில் எரிபொருளின் தரம் குறித்து பரிசோதனை நடத்துவதற்கு சுயாதீன நிறுவனமொன்று கிடையாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே சமையல் எரிவாயு தரம் குறைந்தது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருட்களும் தரம் குறைந்தவை என பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.