யாழ்.பல்பகலைக்கழக ஊழியர் சங்கம் நாளை மௌன தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் த.சிவரூபன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று இரவு (01.12) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவி வரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு 23.11.2021 வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேற்படி அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம் இலங்கையின் சகல பல்கலைக்கழகங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்த வகையில் அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவில் அங்கம் வகிக்கின்ற எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் நாளை (02.12.2021) நண்பகல் 12.00 மணிக்கு மேற்படிப் போராட்டத்தினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கொரோனா சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து முன்னெடுக்கவுள்ளது என்பதனை தங்களிற்கு அறியத்தருகின்றோம்.
எனவே சகல கல்விசாரா ஊழியர்களையும் இப்போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.