முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் நான்கு வருடங்களுக்கு பிறகு அவரது வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக் ஆகியோரால் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் சாவியை ஒப்படைத்து நிலையில் தீபா மற்றும் தீபக் ஆகியோர் வீட்டை திறந்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையத்தையும் அங்குள்ள அசையும் சொத்துக்களையும் அரசுடமையாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தின் சாவியை, தீபா மற்றும் தீபக்கிடம் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி வழங்கினார். பின்னர் அவர்கள் இருவரும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்துக்கு வந்துள்ளனர்.
2017 ல் இந்த இல்லத்தின் அனைத்து அறைகளையும் பார்த்தேன், எந்த அறையும் சீலில் இல்லை, அதிகாரிகள் அனைத்து அறைகளையும் காட்டினார்கள். இந்த வீட்டிற்காக முன்பு இருந்த அரசு கொடுத்த 67கோடி ரூபாய் கோர்ட்டில் தான் உள்ளது.
இதன்போது தீபா கருத்து தெரிவித்துள்ளதாவது,ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை துவங்க வேண்டும் என்று தான் நீதிபதி சொல்லி உள்ளார். ஆனால், இந்த வீட்டை அறக்கட்டளை ஆக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் தீர்ப்பில் சொல்லவில்லை.
அத்தை பயன்படுத்திய பொருட்கள் எதுவும் இங்கு இல்லை. அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வீட்டை சீரமைக்க வேண்டும். அதற்கு நீண்ட காலம் ஆகும்.
இந்த வீட்டை கடந்த அதிமுக அரசுதான் நினைவு இல்லமாக அறிவித்தது, இதற்காக அதிமுக மேல்முறையீட்டுக்கு சென்றால் நீதிமன்றத்தில் அதனை சட்ட ரீதியாக சந்திப்போம். இப்போதைய தமிழக அரசு இந்த வீடு தொடர்பாக மேல்முறையீடு செய்யாது என நம்புகிறேன். ஜெயலலிதா இறப்பில் சந்தேகம் உள்ளது, தமிழக அரசு அதனை விசாரணை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.