ஒமிக்ரோன் அச்சத்தால் பணக்கார நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகளவில் உருமாற்ற வகை ஒமிக்ரோன் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன.
ஒமிக்ரோன் சமூக பரவலாக மாறி, அலையாக உருவெடுத்தால் கோவிட் தடுப்பூசியின் தேவைகள் அதிகரிக்கும். இதனால், ஒமிக்ரோன் வைரஸ் அச்சத்தால் பணக்கார நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும், கோவிட் தடுப்பூசிகள் விநியோகிப்பதில் சிக்கலாகிவிடும் எனவும் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி துறை தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் தெரிவித்துள்ளதாவது,
கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அபாயக்கட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடுவது தான் நோயை தடுக்கும் ஆயுதம். ஐரோப்பிய நாடுகளில் உருமாற்ற வகை கோவிட் தொற்று பரவலை உன்னிப்பாக கவனித்து வருகின்றோம்.
இதனால், புதிய தடுப்பூசிகள் தேவைப்படுமா என்று ஆலோசித்து வருகிறோம். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறன் உருமாற்ற கோவிட் வைரஸ்க்கு எதிராக போதுமானதாக இருக்குமா? என்பது குறித்த போதுமான தரவு எங்களிடம் இல்லை.
ஆனால், அது தொடர்பான ஆதாரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். ஒமிக்ரோன் நிலைமை என்னவாக இருந்தாலும், உலகளவிலான தடுப்பூசிக்கான விநியோகம் மீண்டும் பணக்கார நாடுகளுக்குத் திரும்பப் போகும் அபாயம் உள்ளது. அதனால், பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கி வைக்காமல், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கும் விநியோகிக்க வேண்டும்.
இதனால் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல், அங்கு பரவல் அதிகரித்து, உருமாறிய வைரஸ்கள் உருவாக வழிவகுக்கும். மேலும், 3-வது தவணை தடுப்பூசி போடுவதாலும், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.