மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தடைகளை வெளியுறவுத்துறை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
‘Trinco 11’ காணாமல்போன சம்பவங்களில் தொடர்புடைய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க என்ற சிப்பாய் ஆகியோருக்கு இப்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது இலங்கைப் படையினர் இவர்கள் ஆவர்.
2020 ஆம் ஆண்டில், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது, “அவரது கட்டளைப் பொறுப்பின் மூலம், மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டது பற்றிய நம்பகமான தகவல்கள் காரணமாக”. “எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையத்தில் மனித உரிமைகளை வைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
மேலும் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும், அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும், பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் பொருத்தமான கருவிகள் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்” என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் 2008 / 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்படும், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும், லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.