ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கோரிக்கை விடுக்க வேண்டும் என முதன்மை மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய முடிவுகளை முன்னெடுக்க வேண்டும் என முதன்மை மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் கட்டாயம் பொது சுகாதாரத்தை பேண வேண்டும் எனவும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தாமதிக்க வேண்டாம் எனவும் மருத்துவர் Kieran Moore கேட்டுக்கொண்டார்.
மேலும், வாய்ப்பு அமையும் போதெல்லாம், ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலையை தொடர நிறுவனங்களும் அமைப்புகளும் அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மக்கள் வீட்டில் இருந்தே தங்கள் அலுவலக பணிகளை தொடரும் போது, வாகன நடமாட்டம் குறைக்கப்படும் என்பதுமட்டுமின்றி, நோய் பரவல் எண்ணிக்கையை குறைக்க அது உதவும் என்றார்.
இதனிடையே, ரொறன்ரோ நகர நிர்வாகமானது நவம்பர் மாத இறுதியில், மொத்த ஊழியர்களும் தங்கள் அலுவலகத்திற்கே திரும்ப வேண்டும் எனவும், ஜனவரி மாதம் முதல் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் இருந்து பணியாற்றும் நிலைக்கு கொண்டுவர வேண்டும் என அறிவித்தது.
இந்த நடவடிக்கை முக்கிய திருப்பமாக அமையும் எனவும் எஞ்சிய நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப ஊக்குவிக்கும் என நம்புவதாக நகர மேயர் John Tory தெரிவித்தார்.
ஆனால் இந்த முடிவானது நேரத்திற்கு தகுந்தார்போல் மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக மேயர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், ஓமிக்ரான் வகை கொரோனா பரவல் மாகாணத்தில் அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையில் 10 சதவீதம் ஓமிக்ரான் தொற்று எனவும் மருத்துவர் Kieran Moore சுட்டிக்காட்டியுள்ளார்