2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், புதிய சுகாதார வழிமுறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய, வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் அனைத்து விமான பயணிகளுக்கும் கோவிட் தொற்று தடுப்புக்கான ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருவதற்கு முன் 12 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 12 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கைக்கான விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பரிசோதனை அறிக்கையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணி ஒருவருக்கு மூன்று மாதங்களுக்குள் கோவிட் தொற்று ஏற்பட்டிருக்குமாயின், குறித்த பயணி விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொண்ட அன்டிஜன் அறிக்கையை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் புதிய சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெஸதோவா, நமீபியா, சிம்பாப்வே மற்றும் ஸ்லோவாக்கியா உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளுக்கு நாட்டிற்கு நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,பொது இடங்களுக்கு செல்லும் போது கோவிட் அட்டை கட்டாயமாக்கப்படும் என கோவிட் தடுப்பு தொடர்பிலான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை தொடர்பிலான விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.