பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த முடியாது. ஆனால், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை தவிர்க்க சில நடவடிக்கைகளை எடுக்கலாம்.
* பல வகையான பிளாஸ்டிக்குகள் சந்தையில் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் உணவு பயன்பாட்டுக்கு ஏற்ற தரமான பிளாஸ்டிக் பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். அதில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகளை சரிபார்த்து வாங்க வேண்டும். அந்த பிளாஸ்டிக் உணவில் நச்சுக்களை வெளியிடாது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* சாதாரண தண்ணீர் பாட்டில்களுக்குப் பதிலாக பி.ஈ.டி என்று குறிக்கப்பட்டிருக்கும் பாட்டில்களை பயன்படுத்தலாம். இந்த பாட்டில்கள் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படாதவை. அதனுள் இருக்கும் திரவத்துடன் வினைபுரியாதவை. இதனால் புற்றுநோய் மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் வராமல் தவிர்க்கலாம்.
* உணவு உட்கொள்வதற்கு பிளாஸ்டிக் பாத்திரத்திற்கு மாற்றாக துருப்பிடிக்காத எக்கு பொருட்களையோ அல்லது பீங்கான் அடிப்படையிலான பொருட்களையோ பயன்படுத்த முயற்சிக்கலாம்.
* வெளியில் சாப்பிடும் போதோ அல்லது உணவுகளை பேக்கிங் செய்யும்போதோ பாலி பேக்குகளுக்கு பதிலாக காகிதப் பைகளை பயன்படுத்தலாம். ஏனெனில் எந்த அளவுக்கு தரமான பிளாஸ்டிக்கை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. காகித பைகள் உணவை சத்தானதாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்திருக்க உதவும்.
* மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு சிறந்தது. பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மண்ணோடு மக்காத தன்மை கொண்டவை. மண் அரிப்பை ஏற்படுத்தக்கூடியவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் பிளாஸ்டிக் கழிவுகளின் ஆக்கிரமிப்பை தடுக்கும். பிளாஸ்டிக் கொள்கலன் அல்லது பாத்திரத்தை குப்பையில் வீசுவதற்கு பதிலாக மறுசுழற்சி பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். அதில் செடிகள் நட்டு வளர்க்கலாம். அது சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும்.