குழந்தை ஒரு பொருளை விரும்பி கேட்கும்போது அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்க்க முடியாது. குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற மன நிலையில் பலரும் இருக்கிறார்கள்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஷாப்பிங் செல்வதற்கு விசேஷ திறமை வேண்டும். தேவையற்ற பொருளை குழந்தை கை காட்டி கேட்டால் மறுப்பு தெரிவிக்காமல் வாங்கிக்கொடுத்தாக வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே அடம் பிடித்து அழத் தொடங்கிவிடும். குழந்தைகளை சமாதானப்படுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இப்போதெல்லாம் அத்தியாவசிய தேவைக்காக பொருள் வாங்குவது குறைந்துவிட்டது.
தங்களின் மகிழ்ச்சிக்காக பொருட்களை வாங்குவதற்கு பலரும் பழகிவிட்டார்கள். அதிலும் குழந்தை ஒரு பொருளை விரும்பி கேட்கும்போது அதை வாங்கிக்கொடுக்காமல் தவிர்க்க முடியாது. பணம் செலவானாலும் பரவாயில்லை, குழந்தை மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என்ற மன நிலையில் பலரும் இருக்கிறார்கள். விலையை கருத்தில் கொள்ளாமல் குழந்தைகள் விரும்பியதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். இதை தெரிந்து வைத்திருக்கும் பல நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் பொருட்களை கடையின் வாசலில் வைத்திருப்பார்கள்.
ஆடைகள்:
குழந்தைகள் எப்போதும் வண்ணங்களை விரும்பும் குணம் கொண்டவர்கள். கண்கவர் வண்ணங்கள் குழந்தைகளை வெகுவாக ஈர்த்துவிடும். அதனால்தான் உடைகள் வாங்கும்போது அவை உடலுக்கு மென்மையாக இருக்குமா? என்பதையெல்லாம் கவனிக்க மாட்டார்கள். ஆடையின் நிறம் பிடித்துவிட்டால் அதைத்தான் எடுத்தாக வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். அந்த ஆடை குழந்தைகளின் உடல் அமைப்புக்கு சவுகரியமாக இருக்கிறதா? என்பதை பெற்றோர்தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏராளமான டிசைன்களை கொண்ட உடை அசவுகரியத்தை தரக்கூடும். கனமாக இருக்கும் உடைகளையும் தவிர்க்க வேண்டும். நிறம் மட்டும் பிடித்தால் போதாது. அணிவதற்கும் வசதியாக இருக்க வேண்டும். எந்த உடையாக இருந்தாலும் குழந்தைகள் கொஞ்ச காலமாவது அணிந்து மகிழ வேண்டும். குழந்தைகள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பார்கள் என்பதால் ஆடை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அதிக விலை கொடுத்து ஆடையை வாங்கிவிட்டு, சில நாட்கள்கூட அணிய முடியாமலும் போகலாம். பண விரயம்தான் மிச்சம். பணத்தை செல வளிக்க தயங்கும் பெற்றோர் கூட குழந்தைகள் விஷயத்தில் ஏமாந்து விடுகிறார்கள். இவர்களுடைய பலவீனத்தை தெரிந்து கொண்டு விலை உயர்ந்த ஆடைகள் சந்தையை அலங்கரிக்கின்றன. அவ்வளவு விலை கொடுக்கும் அளவிற்கு அந்த ஆடையில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.