ஏர்வினியா உள்ளிட்ட தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்கள் தனது தயாரிப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையுடன் உரப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சீன ‘Seawin Biotech’நிறுவனம், பணம் செலுத்தத் தவறியமை தொடர்பில் இலங்கை அரச வங்கிகளுக்கு எதிராக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்ததாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை அறிக்கையின்படி, கப்பல் மூலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட சீவின் பயோடெக் மூலம் தயாரிக்கப்பட்ட 20,000 தொன் சேதனைப் பசளைகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என்று குறித்த பேச்சாளர் குறிப்பிட்டார்.
‘Seawin Biotech’ நிறுவனம் இலங்கையின் அரச வங்கிக்கு எதிரான தரநிலைகள் மற்றும் புவர்ஸ் தரப்படுத்தல் (Poor’s rating) மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை (Moody’s) மற்றும் ஃபிட்ச் தரப்படுத்தல்(Fitch Group) ஆகிய முன்னணியான மூன்று சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாக கூறியுள்ளது.
“இந்த மூன்று நிறுவனங்களுடன் தொடர்புடைய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தொடர்புடைய அபாயங்களை நினைவூட்டுவதற்காக தமது நிறுவனம் இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக ‘Seawin Biotech’ நிறுவன பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடப்போவதாக ஏற்கனவே சீன நிறுவனம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது