மட்டக்களப்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் கப்பல் ஒன்றின் மூலம் கனியவளங்கள் அகழப்படுவதாக வெளியான சமூக ஊடகத் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
மட்டக்களப்பின் கடல் பகுதியில் நங்கூரமிட்டுள்ள இந்த கப்பல் தொடர்பில் , நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
கடலில் மணலை அகழும் இந்த கப்பலில் இருந்து மற்றும் ஒரு கப்பல் மணலை ஏற்றிச்செல்வதாக உள்ளுார் மீனவர்களை கோடிட்டு தெரிவித்திருந்த அவர், ஆயுதங்கள் சகிதம் இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அரச அதிகாரிகள் அங்கு சென்றபோது அவர்களை திருப்பியனுப்பியதாகவும் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இந்தக் கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பங்களாதேஸூக்கு செல்லும் வழியில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நங்கூரமிட்டிருந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் திருகோணமலையில் உள்ள கப்பல் நிறுவனத்தின் முகவரகத்தால், எரிபொருள் நிரப்பட்டப்பட்ட பின்னர் குறித்த கப்பல் உரிய இடத்துக்கு புறப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுளளது. எனவே மக்கள் தவறான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் அமைச்சு கோரியுள்ளது.