வடமாகாண வைத்தியசாலைகளில் பணியாற்ற மேலும் 54 வைத்தியர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சுகாதார அமைச்சினால் உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த வைத்திய அதிகாரிகளுக்குக் கடந்த 23ஆம் திகதி நாடளாவிய ரீதியில் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்நியமனத்தில் வடமாகாணத்திற்குப் புதிதாக 54 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட மருத்துவமனைகளுக்கும், 14 பேர் மன்னார் மாவட்ட மருத்துவமனைகளுக்கும், 10 பேர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கும், 8 பேர் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைகளுக்கும், 7 பேர் வவுனியா மாவட்ட மருத்துவமனைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக மேலும் 6 மருத்துவ அதிகாரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் மத்திய சுகாதார அமைச்சினால் புதிதாக வழங்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் நியமனத்தின்போது வடமாகாணத்திற்கு 188 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.