அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தி, நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்புக்கு காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரை ஜனவரி மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை, அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை தொடர்பில் எழுந்த கருத்து வேறுபாட்டை அடுத்தே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார்.
குறித்த சம்பவத்தில் பாண்டிருப்பை சேர்ந்த நவீனன் மற்றும் ஒலுவிலை சேர்ந்த அப்துல் காதர், பிபில மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களை சேர்ந்த துசார, பிரபுத்த உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்திருந்தனர்.
அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளதுடன், விடுமுறை வழங்காததால் ஆத்திரமடைந்த பொலிஸ் சார்ஜன் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.