சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 17ஆண்டு நினைவு நாள் இன்று நாடளாவிய ரீதியில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுப்பூர்வமாகச் சுனாமி அனர்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக 2800க்கும் மேற்பட்டவர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில், இன்று அதன் 17வது ஆண்டு நினை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிர்கள் காவுகொள்ளப்பட்ட மட்டக்களப்பு திருச்செந்தூர் பகுதிகளில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
திருச்செந்தூரில் சுனாமி பேரனர்த்தம் காரணமாக இப்பகுதியில் 243 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் வழிபாடுகள் நடாத்தப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுத்தூபியில் சுடர் ஏற்றப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.