இலங்கையை பொறுத்த வரையில் தற்போது சில விடயங்கள் பேசுப்பொருளாக மாறிவருகின்றது.
அதாவது,எரிவாயு வெடிப்பு,எரிவாயு பற்றாக்குறை,உணவுப்பொருள் தட்டுப்பாடு,டொலர் தட்டுப்பாடு,மரக்கறிகளின் விலை அதிகரிப்பு,எரிப்பொருட்களின் விலை உயர்வு,பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு,முச்சக்கர வண்டிகளின் கட்டண அதிகரிப்பு,திடீர் மின் வெட்டு,நீர் வெட்டு,வாகன இறக்குமதிகளுக்கு தடை என பட்டியல் நாளாந்தம் நீண்டுக்கொண்டே செல்கின்றது.
இதற்கமையவே,ஆங்காங்கே மக்கள் சில பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பல மணி நேரம் காத்துக்கிடக்கும் வரிசைகளும் நீண்டுச்செல்கின்றது.
இலங்கையில் திடீரென இவ்வாறு பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன? என்பது பலர் மனதில் தினந்தோறும் எழும் கேள்விகளில் ஒன்றாகவும் உள்ளது.
1970ம் ஆண்டு காலப்பகுதியில்,அரிசி, கோதுமை மா, தானிய வகைகள், ஆடைகள் என அனைத்து விதமான பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவியதுடன், அந்த காலப்பகுதி பஞ்சம் போன்று எதிர்வரும் காலங்களிலும் நாட்டில் பாரிய உணவு தட்டுப்பாட்டினால் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
அண்மையில், இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினி இறக்குமதியை ஜனாதிபதி தடை செய்திருந்தார். இதற்கு எதிராக பல பகுதிகளில் விவசாயிகளினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இரசாயன உர பயன்பாட்டிலிருந்து நீங்கி, சேதனப் பசளையை பயன்படுத்துவதாக எடுத்த முடிவை நிராகரிக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பின்னர் செய்கை உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய அரசாங்கம், செய்கை உரத்திற்கு மானியம் வழங்கப்படாது என அறிவித்திருந்த நிலையில்,டொலர் தட்டுப்பாடு காரணமாக உர இறக்குமதிகளை முன்னெடுக்க முடியாது இறக்குமதியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், மஞ்சள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் பாரிய அளவிற்கு உயர்ந்திருந்தன. தற்போது மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கும், உணவு தட்டுப்பாடுகளுக்கும்,மரக்கறிகளின் விலை உயர்விற்கும் இவையே காரணமாக அமைந்தது.
இதேவேளை, நாடு முழுவதும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசை வரிசையாக நிற்பதை காண முடிகின்றது. சமையல் எரிவாயு, மண்ணெண்ணை, பால்மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசைகளில் நிற்பதை காண முடிகின்றது.
அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறையால், சீனி உட்பட்ட பொருட்கள் அடங்கிய 1,300 க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் மக்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் போதியளவு உள்ளதாகவும்,உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லையென்றும் அரசாங்க தரப்புகள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.