பிரித்தானியாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் கண்டிருக்கும் நிலையில், ஊழியர்கள் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் குப்பைகள் குவிந்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா மாறுபாடு வேகமாக பரவி வருவதுடன், புதிய உச்சம் கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. செவ்வாயன்று, முதல் முறையாக ஒரே நாளில் 200,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன.
அரசாங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 24 மணி நேரத்தில் சரியாக 218,724 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 149,000 என அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவில் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பல சுகாதார மையங்கள் ஓமிக்ரான் மாறுபாடு தொடர்பாக அப்பட்டமான பணியாளர் பற்றாக்குறையால் பேரழிவை அறிவித்துள்ளன.
மருத்துவமனைகளும் நாளும் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. குறைந்தது ஆறு மருத்துவமனை குழுமங்கள் தொழிலாளர்கள் தட்டுப்பாட்டால் கடும்போக்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளன.
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளும் பணியாளர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக நகர நிர்வாகம் குப்பை சேகரிப்பதை ரத்து செய்துள்ளது அல்லது ஒரு வாரம் வரையில் கால அவகாசம் கோரியுள்ளது.
இதனால் நாட்டில் பெரும்பாலான தெருக்களில் குப்பகைகள் குவிந்து காணப்படுகிறது. நகர நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, எஞ்சிய ஊழியர்களைக் கொண்டு நிலைமையை சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது.
மேலும், தற்போதையை சூழலைவிடவும் மிக மோசமான நிலை அடுத்த சில வாரங்களில் உருவாகும் என்றே தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்த சில நாட்களாக சில ரயில் நிலையங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் பெரும்பாலான ரயில்வே நிறுவனங்கள் சிறப்பு கால அட்டவணைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
மட்டுமின்றி, இங்கிலாந்தில் உள்ள பத்து ரயில்வே ஊழியர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்ட விடுப்பில் உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வணிக வளாகங்கள் அங்காடிகளிலும் ஊழியர்கள் தட்டுப்பாட்டு காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் மட்டும், இந்த துறையில் பணியாற்றும் 1,000 ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.