கனடாவில் இளையோர்களை தாக்கும் மர்ம மூளை நோய்க்கு தீர்வு காண முடியாமல் மருத்துவ நிபுனர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கனடாவின் நியூ பிரன்சுவிக் பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக அடையாளம் கண்டு வரும் இந்த விசித்திர மூளை நோய் மருத்துவர்களுக்கு பயத்தையும் குழப்பத்தையும் ஒருசேர அளித்து வருகிறது.
இதுவரை இந்த நோய்க்கான காரணம் தொடர்பில் கண்டறிவதில் எந்த அறிகுறியும் தென்படவில்லை என்பது மட்டுமல்ல, அதன் அருகாமையிலும் மருத்துவர்களால் எட்ட முடியவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
நினைவாற்றல் பிரச்சனைகள், தசைப்பிடிப்பு, நடப்பதில் சிரமம் அல்லது விழுதல், பிரமை, உடல் எடை இழப்பு மற்றும் கைகால்களில் வலி ஆகியவை குறித்த நோய்க்கு அறிகுறிகளாக கூறப்படுகிறது.
கடந்த 2019ல் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த விசித்திர மூளை நோய் தற்போது மருத்துவ நிபுணர்களுக்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பெரும்பாலும் இளையோர்களுக்கே இந்த நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுவதாகவும், தற்போது எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் பொதுவாக நரம்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவதில்லை, மட்டுமின்றி, தற்போது இந்த விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள இளையோர்கள் அனைவரும் முன்பு ஆரோக்கியமாகவே இருந்துள்ளனர்.
நோய் பாதிப்புக்கு இலக்காகும் இளையோர்களின் எண்ணிக்கை கவலை அளிப்பதாகவும், அவர்களுக்கு உரிய விளக்கத்தை அளிப்பது நமது கடமை எனவும் மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
30 வயது கடந்த பெண் ஒருவர் குறித்த நோயால் பாதிக்கப்பட்டு, பேசும் திறனை இழந்துள்ளதாகவும் தற்போது குழாய் மூலம் உணவளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வைத்திய பராமரிப்பில் ஈடுபட்ட 20 வயது கடந்த செவிலியர் ஒருவருக்கு சமீபத்தில் அந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, குறித்த விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட கணவரை பராமரித்துவந்த பெண் ஒருவருக்கு தற்போது அந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நியூ பிரன்சுவிக் பகுதியில் இதுவரை இதுபோன்ற விசித்திர நோயால் 48 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதன்மை சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆனால் சுமார் 150 பேர்கள் வரையில் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 8 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஆனால் குறித்த விசித்திர நோயால் இறந்தார்கள் என உறுதிப்படுத்த முடியவில்லை என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.