விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட 800 புதிய வாகனங்கள் அபராதம் மற்றும் வரிகளைப் பெற்ற பின்னர் விற்பனைக்கு விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) ஜி.வி.ரவிப்பிரிய (G. V. Ravipriya) தெரிவித்துள்ளார்.
விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டு தற்போது சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், சில சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்தும் வகையில், குறித்த வாகனங்களை சந்தைக்கு விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,
திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 262 வாகனங்கள் இம்மாத இறுதிக்குள் தேவையான அபராதம் மற்றும் வரிகள் வசூலிக்கப்பட்ட பின் விடுவிக்கப்படும் என கூறியுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களை விடுவிக்க, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 4 பில்லியன் நிதி ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.