உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் பெண்ணின் கூந்தலில் தெளிக்க தண்ணீர் இல்லாததால் நிபுணர் எச்சிலை துப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகரில் சலூன்கடை நடத்தி வருபவர் சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப். இவரது கடைக்கு பூஜா குப்தா என்ற பெண் சிகை அலங்காரம் செய்ய சென்றார். அப்போது கூந்தலில் தெளிக்க தண்ணீர் இல்லாததால் எச்சிலை துப்பினார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோ தேசிய பெண்கள் ஆணையத்தின் பார்வைக்கு சென்றது. அவர்கள் இந்த வீடியோவை உத்தரபிரதேச மாநில போலீசாருக்கு அனுப்பி இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூறினார்கள். தேசிய பெண்கள் ஆணையம் டுவிட்டரிலும் பதிவிட்டது.
இந்த நிலையில் சிகை அலங்காரம் செய்ய சென்ற பூஜா குப்தா தனது அனுபவங்களை விவரிக்கும் மற்றொரு வீடியோவும் இணையதளத்தில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் பூஜா குப்தா கூறியதாவது:-
நான் சிகை அலங்கார நிபுணர் ஜாவித் ஹபீப்பின் சலூன் கடைக்கு சென்றேன். அவர் எனக்கு சிகை அலங்காரம் செய்தார். அப்போது தண்ணீர் இல்லை என்பதால் எனது தலையில் எச்சிலை துப்பினார்.
இனிமேல் நான் தெரு ஓரம் இருப்பவர்களிடம் சென்று முடிதிருத்தம் செய்வேன். ஜாவித் ஹபீப்பிடம் செல்லமாட்டேன்.
இவ்வாறு அவர் வீடியோ வில் கூறியுள்ளார்.
பூஜா குப்தா அழகு நிலையம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.