சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, வீட்டு சமையலறையில் இடம்பிடித்திருக்கும் இயற்கைப் பொருட்களை விட சிறந்தது எதுவுமில்லை. அவற்றை கொண்டு அற்புதமான குளிர்கால பேஸ் பேக்குகளை உருவாக்கலாம்.
இந்தியா போன்ற வெப்ப மண்டல கால நிலை நிலவும் நாடுகளில் குளிர்காலம் மிகவும் குறுகியது. அதேவேளையில் மற்ற பருவ காலங்களை விட குளிர்காலத்தில்தான் சருமம் வறண்டு போய்விடும். காற்றில் ஈரப்பதம் குறைவதால் சருமம் உலர்வடைந்து விடும்.
சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை வழங்கும் எண்ணற்ற பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும் அவற்றில் சில வகை ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. அவை சில நன்மைகளை வழங்கினாலும் குறைபாடுகளையும் கொண்டிருக்கிறது. எல்லோருடைய சருமத்திற்கும் அவை ஒத்துக்கொள்வதில்லை.
சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, வீட்டு சமையலறையில் இடம்பிடித்திருக்கும் இயற்கைப் பொருட்களை விட சிறந்தது எதுவுமில்லை. அவற்றை கொண்டு அற்புதமான குளிர்கால பேஸ் பேக்குகளை உருவாக்கலாம்.
வாழைப்பழம் – தேன்:
வாழைப்பழம் சரும மாய்ஸ்சுரைசராக செயல்படக்கூடியது. இதனுடன் தேன் சேர்ப்பது ஆச்சரியப்படத்தக்க வகையில் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கக்கூடியது. ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப் பழத்தை போட்டு மசித்துகொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட்டு இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.
தேன்-எப்சம் உப்பு:
இந்த உப்பு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றக்கூடியது. தேன் நீரேற்ற பண்புகளை கொண்டது. இவை இரண்டையும் இணைத்தால், குளிர்காலத்தில் சரும வறட்சியை கட்டுப்படுத்திவிடும். இரண்டு டேபிள்ஸ்பூன் தேனுடன், அதே அளவு எப்சம் உப்பை சேர்த்து பசை போல் குழைக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் உலரவைத்துவிட்டு முகத்தை கழுவி விடலாம். உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும் தன்மை தண்ணீருக்கு உண்டு. குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்துவிடும் என்றாலும் தினமும் குறைந்தது 7-8 டம்ளர் தண்ணீரையாவது பருக முயற்சிக்கவும்.
ஷியா வெண்ணெய் – தேங்காய் எண்ணெய்:
இவை இரண்டும் சருமத்தில் நீர்ச்சத்தை தக்கவைக்கக் கூடியவை. வறண்ட சருமத்தில் மேஜிக் செய்யக்கூடியவை. ஷியா வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக குழைத்து முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விடலாம்.
ஓட்ஸ் – தேன்:
ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி வறண்ட சருமத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கக்கூடியது. அரை கப் ஓட்ஸை நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ளவும். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை பசை போல் குழைத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
சில நிமிடங்கள் கழித்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கற்றாழை-தேன்:
கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை கொண்டது. தோல் வயதாவதை தடுத்து இளமை பொலிவுக்கு வித்திடக்கூடியது. இரண்டு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் சேருங்கள். இரண்டையும் நன்றாக கலக்குங்கள். இந்த கலவையை கழுத்து மற்றும் முகத்தில் மெதுவாக தடவுங்கள். பின்பு 15-20 நிமிடங்கள் உலர வைத்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.