கொரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை இந்தியாவிடம் ரூ. 73 ஆயிரம் கோடி கடன் கேட்க உள்ளது.
சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை, இந்தியாவிடம் 1 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 73 ஆயிரம் கோடி கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் அஜித் நிவார் கப்ரால் கூறுகையில், ”சரக்கு இறக்குமதி செய்ய இந்தியாவிடம் ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடக்கிறது.
உணவு பொருள் இறக்குமதிக்காக மட்டும் இந்த தொகை செலவிடப்படும். இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவிடம் இருந்து மற்றொரு கடன் வாங்க பேசி வருகிறது.
எனினும் கடன் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ”என்றார். முன்னதாக கடந்த வாரம் சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இருந்தார்.
அப்போது அவரிடம் கோரிக்கை விடுத்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்தால் அது தங்கள் நாட்டுக்கு பயனுள்ளதாக அமையும் எனக்கூறியிருந்தார்.