இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது அலுவலக வெளிப்பகுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அப்போது இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது அலுவலக வெளிப்பகுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
போரீஸ் ஜான்சனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. அவருக்கு சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று கீழ் சபையில் போரீஸ் ஜான்சன் பேசினார்.
அப்போது கொரோனா விதிமுறைகளை மீறி விருந்தில் பங்கேற்றது தவறு என்று முதல் முதலாக அவர் ஒப்புக் கொண்டார். அது ஒரு வேலை சம்பந்தமான நிகழ்வு என்று தான் நம்பியதாக அவர் தெரிவித்தார். இதற்காக மனதார மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
ஆனால் இதை ஏற்காத எதிர்க்கட்சித்தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.